Thursday, 22 September 2011

மசாடா - Masada
தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான். - (2 சாமுவேல் 23:14).

இஸ்ரவேல் தேசத்தில் மசாடா என்னும் இடம் சவக்கடலுக்கும் எங்கேதி என்னும் இடத்திற்கும் சமீபமாயும் தனியாகவும் அமைந்துள்ள ஒரு பெரிய அகன்ற பாறையின் மேல் உள்ள இடமே மசாடாவாகும். இந்த மசாடாவிற்கு செல்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. அங்கு செல்வதற்கு சரியான பாதைகள் இல்லை. நாங்கள் இஸ்ரவேலுக்கு சென்றிருந்தபோது, இந்த மசாடாவிற்கு அழைத்து சென்றிருந்தார்கள். நாங்கள் கேபிள் காரில் தான் அங்கு செல்ல முடிந்தது. கீழிருந்து மேலே செல்வதற்கு பாம்பின் பாதை என்று சொல்லப்படும் வழி மாத்திரமே நடந்து செல்வதற்கு உள்ளது.
இந்த மசாடா 190 அடி கடல் மட்டத்திலிருந்து உயரமானதாகவும், சவக்கடலில் இருந்து 1900 அடி உயரமானதாகவும் அமைந்துள்ளது. மேலே 23 ஏக்கர் பரப்பளவு உள்ளதாக அகலமானதாக உள்ளது. தாவீது சவுல் ராஜா தன்னை துரத்தி வந்த போது இந்த இடங்களில் தங்கியிருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மசாடாவை பற்றி வேதத்தில் கூறப்படாவிட்டாலும், தாவீது தங்கியிருந்த அரணான இடம் இதுவாயிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த மசாடாவில் ஏரோது ராஜா அந்த நாட்களில் ஒரு அரண்மனையை தனக்கென்று கட்டி, 15 தளவாடங்களை வைக்கும் சேமிப்பு அறைகளையும், அந்த காலத்திலேயே ஸ்பா என்று சொல்லப்படும் நீராவி குளியல் போன்றவற்றை தனக்கென்று ஆயத்தப்படுத்தி, அந்த இடத்திலே சகல வசதிகளோடும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
கி.பி. 70ல் தீத்து ராயன் எருசலேமை நெருப்பினால் கொளுத்தி, ரோமர்கள் எருசலேமை கைப்பற்றியபோது, எலியேசர் பென் யார் என்னும் ரபியின் தலைமையில் ஒரு கூட்ட மக்கள் ரோமர்களுக்கு விரோதமாக கலகம் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் எருசலேமில் இருந்தால், ரோமர்கள் அவர்களை கைது செய்து கொன்று போடுவார்கள் என்று நினைத்து, இந்த கூட்டத்தினர் மசாடாவில் தங்கி, அங்கிருந்து போர் திட்டங்களை தீட்ட ஆரம்பித்தனர். மூன்று வருடங்கள் அங்கேயே இருந்து, அவர்கள் ரோமர்களுக்கு எதிராக கலகம் செய்து கொண்டிருந்தனர். இதை அறிந்த ரோம அரசு அவர்களை பிடித்து வரும்படியாக தன் படையை அனுப்பியது. மிகவும் உயரமாக இருந்த மசாடாவில் தங்கியிருந்த இந்த யூதர்களை பிடிப்பது என்பது மிகவும் சிரமமான காரியமாக ரோமர்களுக்கு இருந்தது.
பெரிய பெரிய கல் எறியும் எந்திரங்களை சிரமத்தோடு கொண்டு வந்து மசாடாவின் சுவர்களை உடைக்க ஆரம்பித்தார்கள். மசாடாவை சுற்றி வளைத்து யாரும் வெளியே செல்ல முடியாதபடி வீரர்களை காவல் வைத்தனர். உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை. யூதர்கள் தாங்கள் எப்படியும் ரோமர்கள் கையில் விழுந்து விடுவோம் என நினைத்து, இனி என்ன செய்வது என்று திகைத்தபடி இருந்த நிலையில், யூத ரபி எலியேசர் எழுந்து பேச ஆரம்பித்தார். அவருடைய அந்த பேச்சு, சரித்திர புகழ் வாய்ந்தது.
'நாம் யாருக்கும் அடிமைப்பட போவதில்லை. தேவன் ஒருவருக்கே நாம் யாவரும் அடிமைகள். நம் மனைவிகளும் பிள்ளைகளும் யாருக்கும் பணிந்து போக வேண்டியது இல்லை. இப்போதும் நாம் தான் ரோமர்களுக்கு விரோதமாக போராட்டத்தை துவங்கினோம், நாமே அதை முடிப்போம்' என்று சொல்லி, அங்கு இருந்த ஒவ்வொரு யூதனும், தன் மனைவியையும், பிள்ளைகளையும் கொல்ல வேண்டும் என்றும், பின் ஒருவரையொருவர் குத்தி கொல்லப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தி, நாம் ஒருக்காலும் புறஜாதியாரின் கரங்களில் மரிக்க வேண்டாம் என்று சொல்லி தன் பேச்சை முடித்தார். அவர் 'நாம் உணவில்லாமல் மரித்தோம் என்று யாரும் சொல்லாதபடி, நம்முடைய உணவு பொருட்களை அழிக்க வேண்டாம். மற்றவர்களுக்கு தெரியட்டும், இங்கு நமக்கு உணவிற்கு பஞ்சமில்லை என்று, மற்ற எல்லாவற்றையும் முதலில் அழித்து விடுங்கள்' என்று சொன்னார். அதன்படி அவர்கள் எல்லா பொருட்களையும் தீ வைத்து கொளுத்தி விட்டு, பின்னர் ஒவ்வொருவரும் தங்கள் மனைவியையும், பிள்ளைகளையும் கொன்று விட்டு, பின் ஒருவரையொருவர் கொலை செய்து கொண்டனர். அந்த நாளில் அங்கு மரித்தவர்கள் 960 பேர் என்று கூறப்படுகிறது.
ரோம வீரர்கள் மிகவும் சிரமப்பட்டு, சுவரை உடைத்து உள்ளே நுழைந்த போது, யாவரும் அங்கு மரித்திருக்க கண்டனர். அங்கு ஒளிந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து சிறு பிள்ளைகள் மாத்திரம் நடந்ததை அறிவிப்பதற்காக விடப்பட்டிருந்தனர். பியேவியஸ் ஜோசபஸ் என்னும் சரித்திர ஆசிரியர், தான் கேள்விப்பட்டதை எழுதியிருக்கிறார்.
யூதர்கள் தாங்கள் ரோமர்களின் கைகளில் சிக்கிவிடாதபடி தைரியமாக இந்த செயலை செய்து தங்கள் முடிவை தெரிந்து கொண்டார்கள் என்று அவர்கள் நினைத்தாலும், அவர்கள் செய்த காரியம் மிகவும் தவறானதே! அவர்களை எப்படியும் கைப்பற்றி விடலாம் என்று மிகவும் பிரயத்தனம் செய்து, அந்த பெரிய மலையின்மேல் எந்திரங்களை பாடுபட்டு கொண்டு வந்து, கடைசியில் ரோமர்கள் யூதர்களை பிடித்து விட்மோம் என்று வெற்றி களிப்பில் இருந்த நேரத்தில், அவர்களுக்கு கிடைத்தது மிகப்பெரிய தோல்வியே!
இந்த சம்பவம் நடந்து 2000 வருடங்கள் ஆகியும், இந்த நாட்களில் யூத வீரர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த இடத்தில் வந்து, தங்கள் மூதாதையர் செய்த காரியத்தை வருத்தத்தோடு நினைவு கூர்ந்து, 'திரும்பவும் இந்த மசாடா விழப்போவதில்லை' என்று உறுதி மொழி எடுத்து கொள்கிறார்கள்.
இந்த யூதர்கள் தங்கள் மூதாதையரான சவுல் செய்த காரியத்தையே செய்திருக்கிறார்கள். எப்படியெனில், 'சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான்' (1 சாமுவேல் 31:3-5) என்று வசனத்தில் பார்க்கிறோம். தாங்கள் ஒருக்காலும் விருத்தசேதனமில்லாதவர்கள் கையில் விழக்கூடாது என்று சவுல் ராஜா பட்டயத்தால் தன்னை குத்தி மரித்ததை போல இவர்களும் செய்தார்கள் என்றாலும், தேவன் அந்த காரியத்தை ஒருபோதும் அனுமதிப்பதில்லை, அது அவர் பார்வைக்கு தவறானதொன்றாகும்.
இந்த மசாடாவிற்கு நாங்கள் சென்றிருந்தபோது, ஒரு சிறிய வீடியோ திரைப்படத்தை எங்களுக்கு போட்டு காண்பித்து, இந்த சம்பவத்தை வெளிப்படுத்தினார்கள். மற்றும் அந்த காலத்திலேயே ஏரோது ராஜா எல்லா வசதிகளோடும் வாழ்ந்திருந்தான் என்பதையும் அந்த இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலமாக தெரிய வந்துள்ளது. தற்போது யாரும் இந்த இடத்தில் வாழ்வதும் இல்லை. இந்த மசாடாவும் யாருடைய கையிலும் விழப்போவதும் இல்லை. அல்லேலூயா!

No comments:

Post a Comment