(சங்கீதங்களில் இடம்பெற்றிருக்கும் (அ) சேலா (ஆ) இகாயோன் (இ) சிகாயோன் (ஈ) மிக்தாம் (உ) மஸ்கீல் (ஊ) ஆரோகணம் போன்ற கலைசொற்கள் எதற்காக இடம்பெற்றுள்ளன. அவை எவற்றை உணர்த்துகின்றன. இக்கட்டுரை அதனை ஆராய்கின்றது. )
எபிரேய மொழியில் எழுதப்பட்ட பழைய ஏற்பாடு, கி.மு 2ம் நூற்றாண்டளவில் கிரேக்கத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டபோது, சங்கீதப் புத்தகத்தில் உள்ள இசையோடு சம்பந்தப்பட்ட பல சொற்கள் கிரேக்கத்தில் மொழிபெயர்க்கப்படாமல், அவற்றின் எபிரேய உச்சரிப்பு முறை கிரேக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனால், பிற்கால மொழிபெயர்ப்புகளிலும் இச்சொற்கள் மொழிபெயர்க்கப்படாமல், எபிரேய உச்சரிப்பு முறையிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. கி.மு. 586 இல் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போன யூதர்கள் அங்கிருந்த காலத்தில் (70 வருடங்கள்) தங்களுடைய மொழியான எபிரேயத்தை மறந்து, பாபிலோனில் பேசப்பட்ட “அரமிக்“ என்னும் மொழியையே தங்களுடைய பேச்சுமொழியாகக் கொண்டிருந்தனர். இதனால் கிரேக்கத்திற்கு பழைய ஏற்பாட்டை மொழிபெயர்த்தவர்கள், எபிரேய மொழியில் இசையோடு சம்பந்தப்ப்ட்ட சொற்களின் சரியான அர்த்த்தை அறியாதவர்களாக அவற்றை எபிரேய உச்சரிப்புக்கு ஏற்றவிதத்தில் கிரேக்கத்தில் எழுதியுள்ளனர். இதனால், பிற்காலத்தில் வேதாகமகால எபிரேய மொழியைக் கற்று தேர்ந்தவர்களின் ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டே எபிரேய மொழியிலான இக்கலைச்சொற்களின் அர்த்தத்தை அறிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.
(அ) சேலா (selah)
சங்கீதப்புத்தக்தில் 39 சங்கீதங்களில் 71 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ள இசையோடு சம்பந்தப்பட்ட ஒரு எபிரேயப் பதம் சேலா (selah) என்பதாகும். (1) சங்கீதப் புத்தகத்தில் பல தடவைகள் இடம்பெறும் இப்பதம், ஏனைய கலைச் சொற்களைப்போல சங்கீதங்களின் தலைப்புக்களில் சேர்க்கப்படவில்லை. சங்கீதங்களின் வசனங்களுக்கு இடையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இப்பதம் '“இசையை மாற்றுவதற்கான ஒரு குறியீடாக“ அல்லது “இடையில் மீட்டப்படும் இசை“ பற்றிய குறிப்பாக உள்ளது. மேலும், பாடப்படும் சங்கீதத்தின் வசனத்திற்கு அல்லது வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அதை மறுபடியும் பாடும்படி அறிவிக்கும் குறியீடாகவும் இது இருந்துள்ளது. (2)
“சேலா என்னும் பதம் “உயர்த்துதல்“ என்று அர்த்தம் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளது. இதன்படி, சேலா என்பது உரத்த சத்தத்துடன் இசையை மீட்டும்படியான குறியீடாக உள்ளது(3). சில வேத ஆராய்ச்சியாளர்கள், இப்பதம் “குனிதல்“ என்று அர்த்தந்தரும் அரமிக் மொழிப் பதத்துடன் தொடர்புற்றுள்ளதாக கருதுகின்றனர். இவர்கள் “மிஷ்னா“ என்னும் யூதர்களுடைய மதநூலில் அன்றாட பலிகளைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவற்றை ஆதாரமாகக் கொண்டே இத்தகைய முடிவுக்கு வந்துள்ளனர் (4) அன்றாட பலிகள் செலுத்தப்படும்போது சங்கீதங்கள் பாடப்படுவதோடு, பாடல் நிறுதப்படும் இடங்களில் எக்காளம் ஊதப்படும் அச்சந்தரப்பத்தில் ஆலயத்தில் கூடியிருக்கும் மக்கள் முகங்குப்புற தரையில் குனிந்து தேவனை வழிபடுவார்கள். இத்தகைய அறிவிப்பைக் குறிக்கும் குறியீடாக “சேலா“ இருப்பதாக சில தேவ ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்ற போதிலும் (5) இசையை மாற்றும்படியான அல்லது இசையின் சத்தத்தை அதிகரிக்கும்படியான ஒரு இசைக் குறியீடாகவே “சேலா“ என்னும் பதம் சங்கீதப் புத்தகத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது. (6)
(ஆ) இகாயோன் (Hihhaion)
சங்கீதம் 9:16 இல் “சேலா“ என்னும் இசைக் குறியீட்டுக்கு முன் “இகாயோன்“ (Hihhaion) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், சங்கீதம் 19:14 லும் 92:2 இலும் “தியானம்“ என்னும் அர்த்தத்துடன் இப்பதம் மொழிபெயர்க்கப்பட்டு சங்கீதத்தின் வசனத்தில் உள்ளது. இதிலிருந்து, இப்பதம் இசைக் குறியீடாக உபயோகிக்ப்படும்போது “தியானத்திற்கு ஏற்ற இசையை மீட்டும்படியான அறிவுறுத்தலாக“ இருப்பதாகக் கருதப்படுகின்றது. (7) எனினும், இச்சங்கீதங்களில் இப்பதம் உண்மையிலேயே இசைக்குறியீடாக உள்ளதா அல்லது சங்கீதத்தின் ஒரு வார்த்தையாக உபயோகிக்கப்பட்டுள்ளதா என்பதை அறியமுடியாமல் உள்ளது.
(இ) சிகாயோன்
ஏழாம் சங்கீதத்தின் தலைப்பில் “சிகாயோன் என்னும் சங்கீதம்“ என்னும் வார்த்தைகள் இருப்பதை நாம் அவதானிக்கலாம். இதேவிதமாக ஆபகூக் 1:1இல் “ஆபக்கூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன் பாடின வி்ண்ணப்பம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “சிகாயோன்“ என்னும் பதம் “தவறுசெய்தல்“ அல்லது “அலைந்து திரிதல்“ என்று அர்ந்தந் தரும் எபிரேயப் பதத்திலிருந்து உருவாகியுள்ளதாகக் கருதப்படுகிறது. எனினும், சிகாயோன் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் 7ம் சங்கீதமும் ஆபகூக் 3ம் அதிகாரமும் பாவமன்னிப்பிற்காக மன்றாடும் சங்கீதமாக இராதமையினால் உணர்ச்சிகள் அலைமோதும் விதத்தில் பாடப்படும் பாடல்களைப் பற்றிய குறிப்பாக சிகாயோன் இருப்பதாக வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். (8). அக்கால அரேபிய மற்றும் அசீரிய பாடல்களிலும் இவ்விதமாக மனஉணர்வுகளைத் தூண்டும் விதத்தில் பாடல்கள் இருப்பதை இதற்கான ஆதாரமாக இவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். (9)
(ஈ) மிக்தாம்
சங்கீதப் புத்தகத்தில் 56 முதல் 60 வரையிலான சங்கீதங்கள் “மிக்தாம் என்னும் சங்கீதம்“ என்று அவற்றின் தலைப்புகள் அறியத் தருகின்றன. ஆங்கிலத்தில் “ஜேம்ஸ் அரசனுடைய மொழிபெயர்ப்பை“(10) அடிப்படையாகக் கொண்டு 16ம் சங்கீதத்தின் தலைப்பில் மிக்தாம் என்பதோடு “பொற்பணதிக்கீதம்“ என்னும் வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது (11) ஆனால், மிக்தாம் என்னும் பதம் மூலமொழியில் “பொன்“ (தங்கம்) என்னும் பதத்துடன் அல்ல “மூடுதல்“ என்று அர்த்தந் தரும் அங்காடிய மொழிப்பதத்திலிருந்தே உருவாகியுள்ளது(12). இதனால் சில வேத ஆராய்ச்சியாளர்கள் இச்சங்கீதங்களை பாவத்திற்கான பிராய்ச்சித்தப் பலியோடு சம்பந்தப்பட்ட பாடல்களாக கருதுகின்றனர். (13). ஏனென்றால் அக்காலத்தில் பாவத்திற்கான பலி செலுத்தப்பட்டு பாவங்கள் மன்னிக்கப்படுவதைக் குறிப்பிட “பாவங்கள் மூடப்படுதல்“ என்னும் சொற்பிரயோகத்தையே உபயோகி்த்து வந்தனர் (14) ஆனால் மிக்தாம் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டிருப்பவைகள், பாவத்தைப் பற்றியவையாக இராமல், சங்கீதக்காரன் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் துயரத்துடன் இருப்பதைப் பற்றிய விவரணங்களைக் கொண்டிருப்பதனால் இவை “உதடுகள் மூடப்பட்ட நிலையில்“ தாவீது மௌனமாகப் பாடிய படல்களாகக் கருதப்படுகிறது. (15) எனவே, “மித்தாம் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ள சங்கீதங்கள் “மௌனமான ஜெபங்களாகவே“ உள்ளன (16) ஜெபங்கள் உரத்த சத்தமாக மட்டுமல்ல மௌனமாகவும் ஏறெடுக்கப்பட்ட முடியும் என்பதை இச்சங்கீதங்கள் அறியத் தருகின்றன.
(உ) மஸ்கீல்
சங்கீதப் புத்தகத்தில் 12 சங்கீதங்கள் (அதாவது 32, 42, 44, 52, 53, 55, 74, 78, 88, 89, 142 எனும் சங்கீதங்கள்) “மஸ்கீல் என்னும் சங்கீதம்“ என்னும் தலைப்பைக் கொண்டுள்ளன. “மஸ்கீல்“ என்னும் பதம் “ஞானவானாக்கு“ அல்லது “புத்திசாலி“ அல்லது திறமையுடனிருத்தல்“ என்னும் அர்த்தங்களைக் கொண்ட பதத்திலிருந்து உருவாகியுள்ளது. (17) இதனால் மஸ்கீல் என்னும் சங்கீதங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள சில சங்கீதங்களின் தலைப்பில் “மஸ்கில் என்னும் போதக சங்கீதம்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் “ஞான சங்கீதங்களே“ (18) எபிரேய மொழியில் மஸ்கீல் என்னும் சங்கீதம் என்னும் தலைப்பைக் கொண்டுள்ளது.
(இவ்வாக்கமானது Dr. M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய சங்கீதங்களின் சத்தியங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கலலூரி)
(இவ்வாக்கமானது Dr. M.S.வசந்தகுமார் அவர்கள் எழுதிய சங்கீதங்களின் சத்தியங்கள் எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். வெளியீடு : இலங்கை வேதாகமக் கலலூரி)
No comments:
Post a Comment