Friday 30 September 2011

புனிதர் பிரான்சிஸ் சேவியர் 1506-1552


புனிதர் பிரான்சிஸ் சேவியர் 1506-1552
ஸ்பெயின் நாட்டில் நாவாரே என்ற இடத்தில் பிரான்சிஸ் சேவியர் பிறந்தார். அவரின் தாய்மொழி பாஸ்க் என்பதாகும். தான் தோன்றிய வம்சத்தைப் பற்றிய பெருமையும், வீராப்பும், உயர் பரம்பரைக்கே உரிய ஏதேச்சாதிகாரமும் உடையவராக ஆரம்பத்தில் காணப்பட்டார். பின்பு இயேசு கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட்டு, அவருக்கே அடிமையானார். இளமைப் பருவத்தில் சாதனையாளனாக விளங்கவேண்டும் என்ற‌ எண்ணமும், விளையாட்டுகளில் ஆர்வமும் அவர் உள்ளத்தில் மேலோங்கி நின்றது. இத்துடிப்புள்ள இதயத்தில் அன்பு, பிற‌ருக்கு உதவும் தாராள மன‌ப்பான்மையும் இழையோடியது. ஆகவே, இயேசு கிறிஸ்துவை தன் இதய நாயகராக ஏற்றுக்கொண்டபின், அவரின் சகிப்புத் தன்மையும், வைராக்கியமான அன்பும் அவர் ஊழியத்தில் மேலோங்கி நின்றது. பாரீஸ் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றதால், அங்கு இக்னேஷியஸ் லயோலாவையும் சந்திக்கும் அரியதொரு வாய்ப்பு அவருக்கு கிட்டியது. அவரோடும் மற்றும் ஐந்து பேரோடும் சேர்ந்து சொஸைட்டி ஆப் ஜீசஸ் என்ற ஸ்தாபனத்தை 1534 ல் நிறுவி, கடவுளுக்கு ஊழியம் செய்ய இந்த ஆறுபேரும் தங்களை அர்ப்பணம் செய்தனர்.
இந்தியாவில் ஊழியம்:
1541 ஆம் ஆண்டு, பிரான்சிஸ் சேவியர் மேலும் இருவருடன் சேர்ந்து, போர்ச்சுக்கல் நாட்டிலிருந்து, இந்தியாவில் போர்ச்சுக்கீஸ் ஆட்சியின் கீழிருந்த கோவாவிற்கு 1542 ஆம் ஆண்டு வந்து சேர்ந்தார். வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக, அங்கு பேசப்பட்டு வந்த மொழியை கற்கலானார். கற்றபின், கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்தவர்களுக்கு போதனை கொடுக்கும்படியாக பாடங்கள் எழுதினார். சிறைச்சாலைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் சென்று, தொழு நோயாளிகளுக்கு ஆராதனை நடத்தினார். தெருக்கள் வழியாக மணியொன்றை அடித்துக்கொண்டு, சிறுவர்களை வகுப்புகளுக்கு வரும்படி அழைப்பது இவரது அன்றாட பணிகளில் ஒன்று. வேதாகம வசனங்களை, மக்களின் தாய்மொழியில் இழுதி அவற்றுக்கு இசை கொடுத்து மாணவர்களைப் பாடச் செய்வது, அவர் கிறிஸ்தவ நம்பிக்கையை மற்றவர்களுக்கு போதிக்க மேற்கொண்ட முறையாகும். அப்பாடல்களின் வார்த்தைகளும், ராகமும் மக்களை ஈர்க்கும்படியாக கவர்ச்சிகரமாக அமைந்திருந்தது. இந்த பாடல்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றன, எங்கும் உற்சாகமாய் பாடப்பட்டன. அப்பகுதி மக்களுக்கும், கோவாவில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கும் அயராது இயேசு கிறிஸ்துவின் போதனைகளை பிரான்சிஸ் சேவியர் அறிவித்து வந்தார்.
தென் இந்தியாவில் ஊழியம்:
பிரான்சிஸ் சேவியர், கோவா ஊழியத்திற்குப் பின் தென்னிந்தியாவில் ஊழியம் செய்யும்படியாக மணப்பாடு, கன்னியாகுமரி, தூத்துக்குடி பகுதிகளுக்கு வந்தார். மீன் பிடிக்கும் தொழிலை செய்து வந்த மக்கள் மத்தியில் ஊழியத்தை ஆரம்பித்து, ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். தூத்துக்குடி பகுதியில், தமிழ் மொழி பேசப்பட்டு வந்ததால், மொழி பெயர்ப்பாளர்களின் உதவியுடன் விசுவாசப் பிரமாணம், பத்து கற்பனைகள், இயேசு கிறிஸ்து போதித்த ஜெபம், பாவ அறிக்கை ஆகியவ‌ற்றை மொழியாக்கம் செய்தார். அப்பகுதியிலுள்ள சிறுவர்களை ஒவ்வொரு நாளும், இருமுறை கூட்டி சேர்த்து, மொழிபெய‌ர்க்கப்பட்ட பாடங்களை சிறுவர்கள் மனப்பாடம் பண்ணும்படி செய்தார். நன்கு மனனம் செய்த சிறுவர்களைக் கொண்டு மற்ற சிறுவர்களுக்கு அவைகளைக் கற்பித்தார்.
தூத்துக்குடியில் நான்கு மாதங்களை செலவிட்ட பின், மற்ற கிராமங்களுக்கும் பயணம் மேற்க்கொண்டார். தூத்துக்குடியில் மாணவர்களை பயிற்றுவித்தது போல், மற்ற இடங்களிலும் அதே முறையில் வேத அறிவுப்புகட்டினார். இந்த கிராமங்களில் ஞானமுடைய ஒன்றிரண்டு உபதேசியார்களையும் நியமித்தார். மொழிப்பெயர்ப்பு பகுதிகளை கிராம மக்கள் கற்கும்படியாக, ஒவ்வொரு கிராமத்திலும் அவ்வேடுகளை வைத்தும் சென்றார். எல்லா இடங்களிலும் ஆராதனை ஒழுங்காக நடைபெறச் செய்தார். களிமண்ணாலும் கூரையாலும் சிறிய ஜெபக் கூடங்கள் அமைக்கப்பட்டன. போர்ச்சுக்கீஸ் அரசாங்கம் கொடுத்து வந்த உதவித் தொகையிலிருந்து உபதேசிமார்களுக்குச் சம்பளம் கொடுக்கவும் வழிவகுத்தார்.
பிரான்சிஸ் சேவியரின் தோற்றம் மக்களை அதிகம் கவர்ந்தது. ஆதிகால அப்போஸ்தலரின் உற்காசமும், ஆர்வமும், சுவிசேஷத்தை அறிவிப்பதில் அவருக்கு இருந்தது. தேவையிலுள்ள மக்களுக்கு உதவி செய்வது. அகதிகளாக வருவோர்க்கு புணர்வாழ்வு அருள்வது. அமைதியற்ற இடங்களில் சமாதானம் கொண்டு வருவது ஆகியன அவருடைய பணியாய் அமைந்தது.
திருவாங்கூர் பகுதியில் முக்காவர் மக்கள் மத்தியிலும் அவர் ஊழியம் செய்தார். அவருடன் இரண்டு குகோவா பாதிரிமாரும் இணைந்தனர். அவருக்கு உதவியாக ஊழியம் செய்து மன்னார் வளைகுடா பகுதியில் மற்றுமொரு சமுதாய மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
இந்தோனேசியா பயணம்:
கொச்சியில் ஊழியம் செய்து கொண்டிருந்தபொழுது, ஒரு பயணியின் மூலம் இந்தோனேசியாவில் மிஷனெரி ஊழியத்திற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக அறிய வந்தார். பிரான்சிஸ் அங்கு ஆட்சிசெய்த அரசர்களில் இருவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், மக்களுக்கு போதனை கொடுப்பதற்கு போதகர்கள் தேவ என்றும் அறிந்த பிரான்சிஸ் சேவியர், 1545 ஆம் ஆண்டு, இந்தோனேசியா சென்றார். தூர தேசங்களில் ஊழியம் செய்வதில் அவர் அதிகம் ஆர்வம் காட்டினார்.
இலங்கையில் ஊழியம்:
ஐந்து மாதங்கள் கோவாவில் ஊழியம் செய்தபின், தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் குறிப்பாக இலங்கை பகுதியில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். மீன்பிடிக்கும் சமுதாய மக்கள் மத்தியில் திறமையான, அறுவடை மிகுந்த பணியை நிரைவேற்றலானார். இவர் ஊழியத்தின் விளைவுகளை கவனித்த யாழ்ப்பான பகுதி அரசர் பயமடைந்து வலுக்கட்டாயமாக அவர் ஊழியத்தை தடை செய்து விட்டார்.
பிற நாடுகளில் ஊழியம்:
1545 லிருந்து 1547 வரை மலாக்கா(போர்ச்சுக்கீஸ் காலனி) பகுதியில் தன் பணியை நிறைவேற்றி, மலாய் பகுதிகளுக்கும் சென்றார். இங்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஒருவரை சந்தித்ததினால், ஜப்பானில் ஊழியத்தை ஆரம்பிக்க வாஞ்சை பெற்றார். இந்த ஜப்பானியர் பெயர் அஞ்சிரோ. பின் நாட்களில் இவர் பவுல் என்ற‌ பெயரில் திருமுழுக்கு பெற்றார்.
சிறிது காலம் கோவா வந்து தங்கி விட்டு, ஒரு ஜெசுட் போதகருடனும், ஜப்பானிய விசுவாசிகளுடனும் ஜப்பானுக்கு புறப்பட்டார். அங்கு ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொண்டு கிறிஸ்தவ விசுவாச அறிக்கையை இயற்றி, உபதேசம் செய்ய ஆரம்பித்தார். சில பட்டணங்களில் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். மற்ற பட்டணங்களில் அனுமதி மறுத்தனர். இவ்விதமாக, ஜப்பானில் முதலாவது சுவிசேஷத்தை அறிவித்த பிரான்சிஸ் சேவியர், ஏறத்தாழ 2000 விசுவாசிகளை உருவாக்கினார். மாபெரும் உலகம் தனக்கு முன்பாக இருப்பதை பிரான்சிஸ் உணர்ந்தார். அந்த உலகை தேவ‌னுக்கு ஆதாயம் செய்வதே தன் தலையாய கடமை என எண்ணி உழைக்கலானார். அன்றைய சமுதாயத்தையோ, அரசியல் அமைப்பையோ, இறையாண்மை அமைப்புகளையோ அவர் குறை கூறவில்லை. போர்ச்சுகீஸ் அதிகாரிகளின் அதிகார துர்ப்பிரயோகத்தைப்பற்றி மேலிடத்திற்கு தெரிவித்தார். இந்தியாவில் அவர்கள் ஆட்சி செய்வதை அவர் கேள்வி கேட்கவில்லை. சுவிசேஷத்திற்கு சாதகமாக அதை உபயோகித்துக்கொண்டார்.
எளிய வாழ்க்கை:
பிரான்சிஸ் சேவியர் உலகப் பற்று இல்லாதவராக வாழ்ந்தார். தரித்திரத்தில் வாழ்வதைத் தெரிந்துகொண்டார். தன்னை தேடி அநேக வாழ்க்கை வசதிகள் வந்தபோதிலும் அவற்றை ஏற்க மறுத்தார். அவர் மேற்கொண்ட உணவு முறை, அவர் எப்படி வாழ்ந்திருப்பார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு, குறைவாக இருந்தது. காலணிகள் மட்டும்தான், தன் உடையுடன் அவர் நீண்ட பயணங்களில் எடுத்துச் சென்ற ஒரே பொருள். கடுங்குளிரையும், கொளுத்தும் வெயிலையும் அவர் பொருட்படுத்தவில்லை. நீண்ட கடல் பயணத்திலும், மிகவும் மோசமான சூழ்நிலைகளையும் அனுபவித்தார்.
சென்ற இடமெல்லாம் ஏழைகளையும், பிணியாளிகளையும் தேடிச் செல்வார். அவர்களுக்கு பணிவிடை செய்வதில் தன் நேரத்தை செலவிடுவார். பகலெல்லாம் இவ்வாறு உழைத்து விட்டு, இரவின் பெரும் பகுதியை ஜெபத்தில் செலவிடுவது அவர் வழக்கம்.
இறுதி நாட்கள்:
சீனாவுக்கு எப்படியும் சுவிசேஷத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற‌ இதய வாஞ்சை அவரை உந்தித் தள்ள, ஒரு கப்பல் மாலுமியை தன் வசமாக்கிக் கொண்டு. அந்நாட்டில் நுழைந்தார். நுழைந்ததுமே கொடிய ஜுரம் அவரை ஆட்கொண்டது. டிசம்பர் 3, 1552 அன்று, அந்த கொடிய காய்ச்சலுக்கு அவர் பலியானார். மரித்த அவரின் பூத உடல், கோவாவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் பார்வைக்கு அவ்வப்போது வைக்கப்படுகிறது.
சுருங்கக் கூறின், இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சோர்வடையாது, அளவற்ற ஆற்றலுடனும், வல்லமையுடனும் பிரான்சிஸ் சேவியர் பிரச‌ங்கித்தார். புதிய ஏற்பாட்டின் வரலாற்றுக்குப் பின் வந்தவர்களில், அதிகமான மக்களுக்கு பிரசங்கித்தவர் என்ற பெருமை இவரைச் சேரும், என்று புத்தகாசிரியர் ஒருவர் கூறியுள்ளார். இந்தியாவில் கத்தோலிக்க திருச்சபை அநேக இடங்களில் தோன்றி வேர்விட்டு, தழைத்து செழிக்க காரணமாய் விளங்கியவர்களில் சிறப்புமிக்க இடம் பிரான்சிஸ் சேவியருக்கு உண்டு.
அழைப்பை அலட்சியப்படுத்தாதிருங்கள்!
கர்த்தர் தமது பணிக்கு உங்களை அழைக்கும்போது மந்திரி பதவியே உங்கள் முன் மண்டியிட்டு நின்றாலும் அதற்கு அடிபணிந்து உங்களது மாண்புமிகு மதிப்பை குறைத்துக் கொள்ளாதேயுங்கள்.
தேவ தூதர்களும் செய்யக் காத்திருந்த சுவிசேஷப் பணி உங்களைத் தேடி வரும்போது அதை ஒரு பெரும் சிலாக்கியமாக நினைத்து உங்கள் வாழ்க்கையை தேவனுக்கு அர்ப்பணித்து முன்னேறுங்கள். அவருடைய பயிற்சி உலகத்தை கலக்கும் மனிதர்களாக பதினொருவரை மாற்றியது. இன்னும் அத்தகைய சீடர்களுக்காய் உலகம் காத்துக் கிடக்கிறது.

No comments:

Post a Comment