Friday 30 September 2011

பத்து கன்னிகைகள்

பத்து கன்னிகைகள்

இயேசுகிறிஸ்து விளம்பின உவமை

சுவி.சுசி பிரபாகரதாஸ்
கலியாண வீட்டைக் குறித்து ஆண்டவர் கூறும் இந்த உவமையானது நமது ஆன்மீக வாழ்க்கையிலே நாம் அடிக்கடி பயன்படுத்துகிற ஒன்றாகும். மத்.25:1-13 வரையுள்ள இவ்வுவமையில் வரும் பத்து கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள், ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். கலியாண வீட்டிலே மாப்பிள்ளையான மணமகன், தனது மணமகளைச் சந்தித்து அழைத்துச் செல்லுவதற்காக வந்துகொண்டு இருக்கிறார். அப்பொழுது மணமகளுடைய தோழிகளான பத்து கன்னிகைகள் அந்த வீட்டிற்கு தூரமாய் நின்றுகொண்டு தங்களது தோழியின் மணவாளனை எதிர்கொண்டு அழைத்துவரும்படி காத்திருக்கிறார்கள்.
இந்த பத்துபேருமே கன்னிகைகள். அதிலே ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள், ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். இவர்களுடைய கன்னிகை தன்மையிலே மாற்றம் இல்லை, பத்துபேருமே கன்னிப்பெண்கள். இந்த பத்து பேருடைய நோக்கத்திலே மாற்றம் உண்டா? அதிலும் மாற்றம் இல்லை. இவர்களது ஒரே நோக்கம் மணவாளனோடு கலியாண வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டும். பத்துபேர் கையிலும் விளக்கு இருந்தது. புத்தியுள்ளவர்கள் கையிலும், புத்தியில்லாதவர்கள் கையிலும் விளக்கு இருந்தது. ஆனால், புத்தியுள்ளவர்கள் கைகளில் விளக்கோடு தங்கள் வழிப்பயணத்திற்கு எவ்வளவு எண்ணெய் தேவை என்பதை அறிந்து, அந்த எண்ணெயை அவர்கள் ஆயத்தமாய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்கள் விளக்கு வைத்திருந்தார்கள், வழிப்பயணத்திற்கு எவ்வளவு எண்ணெய் தேவை என்பதை அறிந்தும், அதை ஆயத்தப்படுத்தாமல் இருந்தார்கள். மணவாளன் வர தாமதித்தார். பத்துபேரும் நித்திரையாயிருந்தார்கள்.
திடீரென்று மணவாளன் வருகிற சத்தம் கேட்டது. பத்து பேரும் தங்கள் விளக்கை ஆயத்தம் பண்ணினார்கள், புத்தியுள்ளவர்களின் விளக்கு எரிந்து பிரகாசித்தது, புத்தியில்லாதவர்களின் விளக்கு எரிந்து அணையத்தொடங்கியது. உடனே புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம், எங்கள் விளக்கு அணைகிறது, உங்கள் எண்ணெயிலே எங்களுக்கு கொஞ்சம் இரவல் கொடுங்கள் என்றுக் கேட்டார்கள். உடனே புத்தியுள்ளவர்கள் ஞானமாய் சொல்லுகிறார்கள்: “…எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்“ (மத்.25:9). மணவாளன் வந்தார்; புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மணவாளனோடு கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். உடனே கதவு அடைக்கப்பட்டது. புத்தியில்லாதவர்கள் பிற்பாடு வந்து கதவைத் தட்டுகிறார்கள். இவர்கள் மற்ற கன்னிகைகளோடு ஆயத்தத்தோடு வந்திருந்தால் அந்த வீட்டிற்குள்ளே நுழையக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். மணவாளனுக்கு இவர்களைப்பற்றி தெரியாது. மணவாட்டிக்குத் தான் இவர்களைப் பற்றி தெரியும். ஆகவே மணவாளன் தானே கதவை திறந்து சொல்லுகிறார்: “நான் உங்களை அறியேன்“ என்று.
இந்த உவமையைத் தற்காலத்தில் தவறாக அர்த்தப்படுத்துகிறார்கள். இந்த உவமையிலே எண்ணெயை ஆவியானவருக்கு ஒப்பிட்டு விளக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். இந்த உவமையின் நடுமைய கருத்து என்ன? மத்தேயு 25:13 சொல்லுகிறது: “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்“. எச்சரிக்கையாயிருங்கள், ஆயத்தமாயிருங்கள். இந்த ஒரே ஒரு கருத்துக்காகத்தான் உவமை சொல்லப்பட்டதேயொழிய ஆவியானவருக்காக சொல்லப்படவில்லை. ஆவியானவரின் ஆளுகையை நாம் ஏற்றுக்கொண்டு இருக்கிறோம். ஆண்டவர் சொல்லாததை சொன்னதாகச் சொல்லுவது ஒரு நல்ல போதனை அல்ல. நான் ஏன் இந்த இடத்திலே ஆவியானவரைப் பற்றி குறிப்பிடவில்லை என்றால், இரண்டு காரியத்தை நாம் கவனிக்க வேண்டும்.
ஒன்று ஆவியானவரை விற்கிற இடத்தில் வாங்க முடியாது. அப்படியே எண்ணெயை ஆவியானவர் என்று ஏற்றுக்கொண்டால், அந்த எண்ணெயை வாங்கி வந்து கதவை தட்டின அந்த ஐந்து கன்னிகைகளைப் பார்த்து மணவாளன் உங்களை அறியேன் என்று சொல்லுகிறார். ஆவியானவரின் ஆளுகையை ஏற்றுக் கொண்ட மக்களை ஆண்டவர் தெரியாது என்று சொல்லுவது ஒரு விகற்பமான ஒரு காரியமாகும். எனவே ஆவியானவரைப் பற்றி இதில் சொல்லவில்லை என்பதை நாம் தெளிவாக அறியவேண்டும். ‘விழித்திருங்கள், ஆயத்தமாயிருங்கள்‘ என்பதே இங்கு சொல்லப்பட்ட மையக்கருத்தாகும். ‘மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்‘. ஆண்டவர் எப்பொழுது நம்மை சந்திக்கப் போகிறார்? ஆண்டவர் எப்பொழுது நியாயந்தீர்க்கப் போகிறார்? எவ்வாறு கணக்கு கேட்கப் போகிறார்? எந்த சமயம், எந்த நேரம் என்பது நமக்குத் தெரியாது. ஆகவே எப்பொழுதும் நாம் விழித்திருக்க வேண்டும். ஆண்டவருடைய வருகைக்குரிய எல்லா அடையாளங்களும் இப்பொழுது நடந்துகொண்டு இருக்கிறது. அவர் வருகைக்குரிய அடையாளங்களையெல்லாம் கண்ணால் கண்டு, புரிந்து கொண்ட நாம் அவர் வருகைக்கு என்னென்ன ஆயத்தங்கள் செய்ய வேண்டும் என்று வேதம் போதிக்கிறதோ அத்தனை ஆயத்தங்களோடு விழித்திருக்கவேண்டும். இதுதான் வேத போதனை!
மனுஷகுமாரன் வருகிற நாள் நமக்கு தெரியாததினாலே புத்தியுள்ள கன்னிகை போல எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் விழிப்போடு இருக்கவேண்டும். கர்த்தருடைய வருகை சமீபம், கர்த்தருடைய வருகைக்குரிய அடையாளங்கள் நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. இந்த கடைசிநாட்களில் உன் வாழ்க்கையிலே எல்லா ஆயத்தத்தோடும் உன் தேவனை சந்திக்க ஆயத்தமாயிருக்கிறாயா? நீ அப்படி சந்திக்க ஆயத்தமாக இருந்து விழிப்போடு இருக்கவேண்டும் என்பதற்காகதான் ஆண்டவர் இந்த உவமையைச் சொன்னார். ஏனென்றால் மனுஷகுமாரன் வரும் நாளோ, நாழிகையோ நமக்குத் தெரியாது. அது நினையாத நாழிகையில் நடைபெறும்.
எனவே வேதத்தை சரியாய் புரிந்து கொள்வோம். ஆண்டவரின் வருகைக்கென்று எப்பொழுதும் ஆயத்தமாயிருப்போம். நம்மை தற்பரிசோதனை செய்து புதுப்பித்துக் கொள்வோம். எப்போதும் நடுக்கத்துடனே அவரை சேவிப்போம். கையில் கொடுத்த உக்கிராண பொறுப்பை உண்மையும், உத்தமமுமாய் நாம் செய்து அவருக்கு மகிமையைச் சேர்ப்போம்.

No comments:

Post a Comment