நேராகவும் கிடையாகவும் இரு மரங்கள் ஒன்றன் மேல் ஒன்று வைக்கப்பட்டு இறுக்கமாகப் பிணைக்கப்படம்போது அது “சிலுவை“
என அழைக்கப்பட்டது. அதேசமயம், அந்நாட்களி்ல் மரணமும் பலவிதங்களில்
நிறைவேற்றப்பட்டது. ஒன்றில் குற்றவாளி அந்த மரத்திலே கட்டித்
தொங்கவிடப்படுவான்; அல்லது ஆணிகளால் அறையப்பட்டு தொங்கவிடப்படுவான்.
இப்படிப்பட்ட ஒரு சிலுவையில்தான் இயேசுவும் ஆணிகளால் அறையப்பட்டு,
சாவிற்காக தொங்கவிடப்பட்டார். எந்தவிதத்தில் தொங்கவிடப்படாலும், சிலுவையில்
தொங்கும் ஒருவன் மூச்சுவாங்க முடியாமல், தனது சரீரத்தின் பாரத்தைத்
தாங்கமுடியாமல், விலா எலும்புகள் நோவெடுக்க, தசைநார்கள் புடைப்பெடுக்க,
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தே
மரிப்பான்.
இயேசுகிறிஸ்து உலகில் வாழ்ந்த அந்தக் காலப் பகுதியில் ஆட்சியிலிருந்த ரோம
சாம்ராஜ்யத்தில் இந்தச் சிலுவை மரம் மரணதண்டனை நிறைவேற்றப்படவென்றே
செய்யப்பட்டது. அதிலும் சாதாரண குற்றவாளிகளையல்ல மிகப் பயங்கர குற்றத்தில்
ஈடுபட்டவர்கள், சபிக்கப்பட்டவர்கள், சமுதாயத்திலே வெகு இழிவான குற்றவாளிகள்
என்று கருதப்பட்டவர்கள்.. இப்படிப்பட்டவர்களுக்கே சிலுவை மரணத் தீ்ர்ப்பு
வழங்கப்பட்டது. மொத்தத்தில் சிலுவை ஒரு அவமானச் சின்னம், சிலுவை மரணத்
தீர்ப்பு ஒருவனுக்கு கொடுக்கப்பட்டால் அவனில் யாருமே கருணை காட்ட
மாட்டார்கள். அத்தனை இழிவானது இந்தச் சிலுவை மரணம், அந்தச் சிலுவை
மரணம்தான் இயேசுவுக்கும் தீர்ப்பானது.
இன்று இந்தச் சிலுவையின் நிலைமையே மாறிவிட்டது. பெண்களின் கழுத்தில்
தொங்கிய சிலுவை, இன்று ஆண், பெண் என்று வித்தியாசம் இல்லாமல் காதிலும்
மூக்கிலும்கூட தொங்குகிறது. ஆனால் வேதாகமம் நமக்கு வெளிச்சம் போட்டு
காட்டும் சிலுவை அதுவல்ல. வேதாகமம் நமக்குக் காட்டிய சிலுவை, அது இயேசு
சுமந்த சிலுவை, நமது பாவம் தீர்க்கப்பட்ட சிலுவை, இது வெறும் கையால்
செய்யப்படட ஒன்றோ அல்லது ஒரு அலங்காரப் பொருளோ அல்லது வெறும் சின்னமோ அல்ல.
அன்று ரோமப் பேரரசுக்கு முன் இயேசு சுமந்துசென்ற சிலுவை, மரணதண்டனை
நிறைவேற்றப்படுகின்ற வெறும் மரமாக இருந்தது. ஆனால், இன்று நமக்கு அப்படி
இல்லை. அது வெறும் மரச்சிலுவை அல்ல; நமது பாவங்களினிமித்தம் இயேசு சிலுவை
சுமந்து மரித்து, பின்னர் உயிர்த்ததால், அந்தச் சிலுவை இன்று நமக்கு ஒரு
விடுதலையின் சத்தியத்தைத் தந்திருக்கின்றது. அது நம் வாழ்வில் நம்மோடு
ஒன்றிக்க வேண்டும். இன்று கிறிஸ்தவர்கள் என்று சொன்னவுடன் நம்முன்
சிலுவையையும் உலகம் இணைத்துததான் பார்க்கிறது.சிலுவை கிறிஸ்தவர்களின் ஒரு
சின்னமாக மாறிவிட்டிருப்பது ஒரு துக்கத்திற்குரிய காரியமே. ஏனெனில் ஏராளமான
கிறிஸ்தவர்களின் வாழ்வில் அந்தச் சிலுவையும் இல்லை; சிலுவையில் அறையப்பட்ட
இயேசுவும் இல்லை.
இயேசுவின் முதல்வருகை இன்றைய காலகட்டத்தில் நடைபெற்றிருந்தால் சிலுவை நமது
வாழ்வில் இடம் பெற்றிருக்குமா? ஆனால், இயேசு வந்த காலம் தேவனுடைய காலம்.
அது தேவனால் நியமிக்கப்பட்ட காலம். அதை யாராலும் மாற்ற முடியாது. “காலம்
நிறைவேறியபோது....“ (காலத்தியர் 4:5) என்று பவுல் எழுதியது. இதனைத்தான்.
சிலுவை மரணம் மிக இழிவான ஒன்றாகக் கருதப்பட்ட காலத்தில்தான் இயேசு வந்தார்.
மிக இழிவானவன் என்று உலகம் கருதக்கூடிய ஒருவனைக் கூட இழந்துவிடக் கூடாது
என்பதுதான் பிதாவின் சி்த்தம். பரிசுத்தராகிய இயேசு சிலுவையிலே தொங்கியதால்
இழிவென்று கருதப்பட்ட சிலுவைக்கும் மேன்மை
கிடைத்தது. இதுதான் உண்மை. இதுவரையிலும் வெறுக்கப்பட்ட அந்த இழிவான சிலுவை,
இப்போது பாடுகளின் சின்னமல்ல; பாடுகளின் மத்தியிலும் மகிழ்ச்சியின்
சின்னமாயிற்று இதுவரையிலும் அருவருக்கப்பட்ட சிலுவை இப்போது அன்பின்
அடையாளமாயிற்று.
அதற்காக சிலுவையின் கோரமான கோலம் மறக்கப்பட்டலாமா? சிலுவையின்
தார்ப்பாரியம் மாற்றமடையுமா? சிலுவையின் தார்ப்பரியம் மாற்றமடையுமா?
சிலுவையில் செய்யப்பட்ட பரிகாரத்தின் மேன்மை வேறுபடுமா? நாம் அவற்றை மறந்த
பாடுகள் வேண்டாம். இயேசு தரும் சுகஜீவியம் மாத்திரம் போதும் என்றால் அது
தகுமா? பாவமற்றவர் சுமந்த அந்தப் பாரச்சிலுவை. மாசமற்றவர் மரித்த அந்த தூய
சிலுவை, நான் மீட்படைய நிமிர்த்தப்பட்ட அந்த மீட்பின் சிலுவை; இதை மறந்து
மனம்போனபடி வாழலாலாமா? அது, சிலுவையிலறையப்படட இயேசுவையே மறுதலிப்பதுபோல
ஆகாதா? இதை உணருகின்ற எவனும் இயேசு சுமந்த சிலுவையும் அத்துடன் தான்
சுமக்கவேண்டிய சிலுவையையும் ஒருபோதும் பறக்கணியான்.
(இவ்வாக்கமானது இலங்கை சத்தியவசனம் வெளியிட்ட என் சிலுவையை எடுத்து எனும் நூலிலிருந்து பெறப்பட்டதாகும். நூலாசிரியர் சாந்தி பொன்னு)
No comments:
Post a Comment