Tuesday, 24 April 2012

ஜெருசலேம் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது இயேசுநாதரின் கல்லறையா?


இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ கண்டுபிடிப்புகள் பதிவு செய்யப்பட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுகின்றன. மனிதனின் ஆராய்ச்சிக் களங்கள் பெரும்பாலும் மண், விண், கடல் ஆகியவற்றோடு தொடர்புடையனவாகவே இருக்கின்றன. விண்ணகப் பரப்பிலும் மண்ணின் அடியிலும் அளவில்லாத ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் விஞ்ஞானிகள், தற்போது ஆன்மீக இறைநிகழ்வுகள் சம்பந்தமான விடயஙகளையும் விட்டுவிடவில்லை.


இஸ்ரேலில் இருக்கின்ற ஜெருசலேம் நகரத்தில் மிகப் பழைமையான ஒரு கல்லறையை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இந்தக் கல்லறை கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் இது இயேசுநாதர் உடல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையாக இருக்கலாம் என்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். இயேசுநாதரின் உடல் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும் எனவும் அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். 
இக்கல்லறை ஜெருசலேம் நகரத்தில் ஒரு நவீன மாடிக் கட்டிடத்தின் அடியில் காணப்பட்டிருக்கின்றது. இது கி.பி. 70 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனவும் இதனை இயேசுநாதரின் ஆரம்பகால சீடர்கள் அமைத்திருக்கலாம் எனவும் ஊகிக்கப்படுகின்றது. கல்லறைக்கு உள்ளே சுண்ணாம்புக் கல்லால் ஆன பெட்டியில் “புனித ஜெகோவா விழித்தெழு“ என்று கிரேக்க மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளதை “தொலைதூரக் கட்டுப்பாட்டு புகைப்படக் கருவி“ மூலமாக கண்டுபிடித்துள்ளார்கள். இதைப் போலவே மற்றொரு பெட்டியில் பெரிய மீனின் வாயில் ஒரு மனிதன் சிக்கியுள்ளதைப் போன்ற உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது பைபிள் கூறப்பட்டிருக்கும் யோனா என்கிற தேவ மனிதரின் கதை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. 
பைபிளின்படி இந்தக் கதையில் யோவாவை விழுங்கிய பெரிய மீன் அல்லது திமிங்கலம் பிற்பாடு அந்த மனிதனை விட்டுவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லறைப் பெட்டியில் காணப்படுகின்ற மீனின் உருவத்தை கணினியின் உதவியுடன் பெரிதாக்கிப் பார்த்தபோது அது யோனாவின் கதையைப் பிரதிபலிப்பதாக இருப்பது கண்டறியப்பட்டது. கல்லறைப் பெட்டிகளில் செதுக்கப்பட்டிருக்கும் வாசகம், மீனின் உருவம் ஆகியவை கிறிஸ்தவ நம்பிக்கையாகிய “உயிர்த்தெழுதல்“ தெய்வீக அதிசய நிகழ்வைக் குறிப்பிடுவதாக உள்ளது என 'Live Science' என்னும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதைப்போன்று பெரும்பாலான கிறிஸ்தவர்களின் கல்லறைகளில் யோனாவின் கதை பொறிக்கப்படுவது வழக்கம்தான் என்றபோதிலும் இம்மாதிரியானவை எதுவும் மிகத் தொன்மையாக முதலாம் நூற்றாண்டினைச் சார்ந்தாக இருக்கப்பெறவில்லை. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த  இந்தக் கல்லறை கண்டுபிடிப்புகளைப் பற்றிய தகவல்களை இணையத்தில் “பைபிளும் விளக்கமும்“ என்ற தலைப்பில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். 

புதிதாக வெளியிடப்படும் இயேசுவின் கல்லறை பற்றிய கண்டுபிடிப்பு மற்றும் தகவல்களை இணையத்தில் சேர்ப்பது மிகப் பெரிய சர்ச்சையை உண்டுபண்ணக் கூடும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தேயிருக்கிறார்கள். 1981 ஆம் ஆண்டிலேயே ஜெருசலேத்தின் இந்தக் கல்லறைக் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டுவி்ட்டபோதிலும், யூதக் குழுக்கள், கல்லறைகளைத் தோண்டுவதையும் ஆய்வு செய்வதையும் எதிர்த்தால், தோண்டி எடுக்கப்பட்ட கல்லறை  அதே இடத்தில் மீண்டும் சீலிடப்பட்டு புதைக்கப்பட்டது ஆராய்ச்சியாளர்களும் அஙகிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

தற்போது சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அகழ்வாராய்ச்சிக் குழுவின் தலைவர் தபோரும் அவரது சகாக்களும் கல்லறையை தோண்டுவதற்கு அனுமதி பெற்றனர். ஆயினும் யூத அமைப்புக்களின் கடும் எதிர்பைப் முன்னிட்டும் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கு பதிலாக தொலைதூரக் கட்டுப்பாட்டின் மூலம் இயங்கும் இயந்திரக் கைகள் பொருத்தப்பட்ட கமராக்களை துளைகள் வழியாக கல்லறைப் பகுதிக்குள் அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : “ஆசீர்வாதம்“ மாத சஞ்சிகை  - April 2012  கட்டுரையாசிரியர் அ. ஆராக்கியராஜ்.

No comments:

Post a Comment