இந்த உலகில் நாம் வாழும் காலங்களில் நமக்கு தெரியாத அனேக காரியங்களை ஒரு அனுமானத்தின் அடிப்படையில் தீர்மானித்து முடிவெடுக்க வேண்டிய அவசியம் உருவாகிறது. உதாரணமாக ஒரு குறிப்பிட்ட பணியை நிறைவேற்ற செல்லும்போது பணம் எவ்வளவு தேவைப்படும் என்பது குறித்தோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை சந்திக்க செல்லும்போது அவர் எப்படிபட்ட்வராக இருப்பார் என்பது குறித்தோ அல்லது தேர்வு எழுத செல்லும் போது என்னென்ன கேள்விகள் கேட்கப்படலாம் என்பது குறித்தோ இன்னும் அனேக காரியங்கள் குறித்தோ நாம் அனேக நேரங்களில் ஒரு மதிப்பீடு செய்து அல்லது அனுமானித்து செயல்படுகிறோம்.
(நமது இரட்சகராகிய இயேசுவையே முப்பது வெள்ளி காசுக்கு மதிப்பிட்ட சம்பவம் கூட வேதாகமத்தில் உண்டு!)
இவ்வாறு அனுமானித்து நாம்செய்யும் காரியங்கள் பல நேரங்களில் சரியாகி விடுவதும் உண்டு சில நேரங்களில் தவறாகி நமக்கு பிரச்சனையை ஏற்ப்படுத்துவதும் உண்டு. நாம் நல்லவர் என்று அனுமானித்த எத்தனையோ பேர் தீயவராக இருந்திருக்கலாம். நாம் தோற்றத்தை பார்த்து தீயவர் என்று அனுமானித்த பலபேர் பழகி பார்த்தபின்னர் நல்லவர்கலாக இருந்திருக்கலாம். பிற மனுஷர்களின் இருதயங்களை நம்மால் அறிய முடியாத காரியத்தால் பலநேரங்களில் நமது அனுமானம் தோல்வியடைந்திருக்கலாம்.
ஆகினும் நாம் யாரை குறித்தும் மதிப்பிடும்போதும் குறைத்து மதிப்பிடாமல் மனதாழமையுடன் நடந்து நம்மை நாம் தாழத்தி மற்றவர்கள் எல்லோரையும் நம்மைவிட மேன்மையானவர்களாக மதிப்பிடுவதே மிகவும் சிறந்தது என்று வேதம் சொல்கிறது.
பிலிப்பியர் 2:3 மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்.
பொதுவாக, தூர பிரயாணம் போகும் ஒருவர் போகும்போது இவ்வளவு செலவாகும் என்று முன்னமே அனுமானித்தாலும் அதற்க்கு சற்று அதிகமான பணத்தை எடுத்துசெல்வது வழக்கம். அதேநேரம் "இவரிடம் சமாளித்து விடலாம்" என்று தெரிந்தால், தேவையானதர்க்கு கொஞ்சம் குறைவாகவே பணம் எடுத்துகொண்டுபோய், இவ்வளவுதான் இருக்கிறது என்று சொல்லி பார்த்து சமாளிக்கலாம்.
ஆனால் மிகமுக்கியமான பிரச்சனைகளை உண்டாக்கும் காரியங்களை
நாம் அனுமாநிக்கும்போது அல்லது நிதாநிக்கும்போது நமக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும் அதை கொஞ்சம் குறைத்து மதிப்பிட்டு பாதகமான நிலை ஏற்ப்பட்டால் அதை எப்படி சமாளிப்பது என்பதன் அடிப்படையிலேயே அனுமானங்களை தீர்மானிக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்தது.
இஸ்ரவேலர் கானானை நோக்கி போகையில் ஆயியை வேவுபார்த்து வந்த விஷயத்தில் ஒரு தவறான அனுமானத்தை தீர்மானித்ததால் அனேக யுத்த வீரர்கள் மடிய வேண்டிய நிலை உண்டானது.
யோசுவா 7:3 ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள்
5. ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று.
இங்கு நடந்த சம்பவம் ஆகான் என்னும் மனுஷனின் திருட்டினால் அடிப்படையில் நடந்திருந்தாலும் இஸ்ரவேலர்களின் அனுமானம் தவறாகி போனது அதனால் பலர் சாக நேர்ந்தது.
அதுபோல் இளைஞனாக தாவீதின் உருவத்தை பார்த்து அவனை தாழ்த்தி தவறாக மதிப்பிட்டு அசட்டை செய்த கோலியாத்து அவனுடைய கையாலேயே மடிய நேர்ந்தது.
பொதுவாக எதிரியின் பலத்தை நாம் என்றுமே குறைத்து மதிப்பிட்டு விட கூடாது! ஒருவேளை கூட்டி மதிப்பிட்டு அவன் தோற்கடிக்கபட்ட பின்னர் அவன் பலம் குறைந்தவந்தான் என்று அறிவோமானால் அதனால் எந்த பாதிப்பும் இல்லை! அனால் எதிரியை குறைத்து மதிப்பிட்டு அவனுக்கு எதிர்த்து நின்று அவன் நம்மை மேற்கொண்டால் நாம் அனேக கஷ்டங்களை சந்திக்க நேரிடலாம்.
தேவன் சாத்தனிலும் பெரியவர் அவரைவிட பெரியவர் எவரும் இல்லை என்பது உண்மை!
I யோவான் 4:4 உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர்.
அதேநேரம், சத்துருவான சாத்தானின் தந்திரங்கள் பற்றி சரிவர தெரியாமல் அவனையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிடவும்முடியாது.
சாத்தானை பற்றி நாம் பார்க்கையில், அவன் தேவ தூதர்களோடு தர்க்கித்தது மட்டுமல்ல, யோபு புத்தகம் சொல்கையில் அவன் கர்த்தருடய சந்நிதிவரை சென்று உத்தமனாகிய யோபுவை பற்றி கர்த்தரிடமே பிராது பண்ணியவன் என்பதையும் அவனின் சொல்லி கேட்டு கர்த்தர் யோபுவை சாத்தானின் கையில் சோதனைக்கு ஒப்பு கொடுத்தார் என்பதை நாம் அறிய வேண்டும்.
யோபு 2:4 சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான்.
அடுத்து, பிரதான ஆசாரியனாகிய யோசுவாவுக்கு கெடுதல் செய்ய பக்கத்தில் நின்ற சாத்தான், கர்த்தரை கண்டு கூட அவன் ஓடவில்லை. கர்த்தரின் கடிந்துகொள்ளும்வரை அங்கேயே நிற்கிறான்.
சகரியா 3:2 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக;
சாத்தான் எதை பார்த்தும் அவ்வளவு சீக்கிரம் ஓடிபோகிறவன் அல்ல! தேவனை ஜெயிக்க முடியாது என்று நன்றாகவே தெரிந்தும் அவரை எதிர்த்து நிற்கவும் துணித அவன், ஒருவர் தேவனின் மகிமையால் நிரப்ப பட்டாலும்கூட அவர் தன்னிடம் உள்ள தேவ வல்லமையை பயன்படுத்தி சாத்தானை எதிர்த்து நின்று விரட்டினால் மட்டுமே அவன் ஓடுவான்.
யாக்கோபு 4:7 பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ஆண்டவராகிய இயேசு எப்பொழுதும் தேவ மகிமையால் நிறைந்த வராகவே இருந்தார். தேவத்துவத்தின் பரிபூரணங்கள் எல்லாமே அவருக்குள் வாசமாயிருந்தது ஆனாலும் அவருக்கு நெருக்கமாக இருந்த யூதாசுக்குள்ளேயே சாத்தானால் புகுந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகே இயேசு அவனை அனுப்பி விடுகிறார்.
யோவான் 13:27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
மேலும் தேவ மகிமையால் நிறைந்த இயேசுகூட பல இடங்களில் அசுத்த ஆவிகளை விரட்டிய போது அல்லது வெளியே போகும்படி கட்டளை இட்டபோதுதான் அவைகள் ஓடியது. சில இடங்களில் அவருக்கு நேரே நின்று அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறது.
லூக்கா 8:27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும் வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். மாற்கு 5:9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி,
மத்தேயு 8:28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்;
கவனிக்கவும், இங்கு பிசாசு பிடித்த எவரும் இயேசுவை பார்த்து ஓடவில்லை! அவர் போகும்படி துரத்திய பிறகே போனது.
மத்தேயு 8:16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி,
ஆண்டவராகிய இயேசுவை விட ஆவியானவரின் மகிமை நிறைந்தவராக யாரும் இருக்க முடியாது என்று கருதுகிறேன். அவரே பிசாசுகளை துரத்தியபிறகுதான் அவைகள் ஓடின எனவே நாமும் தேவனின் வல்லமையால் நிரப்பபட்டாலும் நமது வார்த்தையை பயன்படுத்தி விசுவாசத்த்ல் துரத்தினால் மட்டுமே பிசாசு ஓடுவான்.
இன்றும் உலகில் அநேகர் எதிரியாகிய சாத்தானை குறைத்து மதிப்பிடுவதுதால் சாத்தான் அவர்களை சுலபமாக மேற்கொண்டு விடுவிறான் என்பதை அறியமுடிகிறது.
தேவனிடம் சாத்தானால் ஒன்றும் செய்யமுடியாமல் போவதற்கு காரணம் அவர் "மஹா பரிசுத்தரும்" "ஒரே நல்லவருமாக" இருப்பதால்தான். ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தால் கழுவப்பட்டு சாத்தானின் பிடியில் இருந்து விடுபட்டு தேவனுடைய பிள்ளைகளாக அதிகாரம் பெற்ற நாமும் தேவனை உறுதியாக பற்றிக் கொண்டு ஆவியில் அனலாய் இருந்து, மேலும் மேலும் பரிசுத்தம் அடைவதோடு, அவர் சொல்லிய வார்த்தைகள்படி வாழ்ந்து, நல்லவராக மாறுவதுமட்டுமே சாத்தானை மேற்கொள்ளும் வழியேயன்றி, பாவத்தை பற்றியும், அதை செய்ய தூண்டும் சாத்தானை பற்றியும் குறைத்து மதிப்பீடு செய்வது சாத்தான் மேற்கொள்ளவே வழி செய்யும்!
ஒருபுறம் கர்த்தரின் வல்லமை குறித்தும் குறைத்து மதிப்பிட்டு சாத்தானுக்கு பயந்துவிடகூடது! அதே நேரத்தில் சாத்தானின் தந்திரங்கள் குறித்தும் நாம் சரியாக நிதானிக்காமல் அலட்சியமாக இருந்துவிட கூடாது என்பதை அறிவிப்பதே இந்த கட்டுரையின் நோக்கம்!